எரிபொருள் மானியம் குறித்து வெளியான அறிவிப்பு
இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள எரிபொருள் விலை மானியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) இதுவரை எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, டீசல் மற்றும் பெட்ரோல் மீதான தற்போதைய மானிய விலையிலேயே விநியோகம் தொடரவுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள மானிய முறைமையின் கீழ், ஒரு லீட்டர் டீசலுக்கு 100 ரூபாயையும், ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு 20 ரூபாயையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த நடைமுறைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி கிடைத்துள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த எரிசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால, "தற்போதைய ஏற்பாட்டை நாம் தொடர முடியும், இதற்கு சர்வதேச நாணய நிதியம் இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, எரிபொருள் விலையேற்றத்திலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் மாதம் ஒன்றுக்கு சுமார் 20 பில்லியன் ரூபாயை செலவிட்டு வருவதாகத் தெரிவித்தார்.
எரிபொருள் இறக்குமதிக்கான முழுச் செலவையும் அரசாங்கம் ஏற்க நேரிட்டால், அது ஆண்டுக்கு சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக செலவை ஏற்படுத்தும் என்றும், இது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் அழுத்தத்தை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி வரை இந்த மானிய முறையைத் தொடர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மே மாதத்திற்குப் பிறகும் இதனை நீடிப்பதா என்பது குறித்து, மத்திய கிழக்கில் நிலவும் சூழல் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இறுதி நிலைப்பாடு ஆகியவற்றைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருவேளை சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி கிடைக்காவிட்டால், தற்போது அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள மானியத் தொகை நேரடியாக எரிபொருள் விலையுடன் சேர்க்கப்பட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.