சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இயங்கும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் கிளை அலுவலகம், இலங்கைப் பிரஜைகள் மற்றும் இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கான சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.
இதற்கமைய வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரங்களைக் கொண்டுள்ளவர்கள், இலங்கையில் வாகனங்களை ஓட்டுவதற்கு அவசியமான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் வசதி இதுவரை வெரஹெர அலுவலகத்தில் மாத்திரமே பிரதானமாக வழங்கப்பட்டு வந்தது.

சாரதி அனுமதிப்பத்திரம்
கடந்த 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 3 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அலுவலகம், ஆரம்பத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரமே சேவைகளை வழங்கி வந்தது.
இதன்படி தற்போது இந்தச் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளதன் மூலம் வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரம் வைத்துள்ள இலங்கைப் பிரஜைகள், இரட்டைக் குடியுரிமை கொண்ட இலங்கையர்கள் ஆகியோர் விமான நிலையத்திலேயே தமது தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
2025 நவம்பர் 17 ஆம் திகதியிடப்பட்ட 2463/04 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், திருத்தப்பட்ட மோட்டார் வாகனக் கட்டண விதிகளுக்கு உட்பட்டு, இதற்கான கட்டணங்கள் அறவிடப்படும். தற்போது வெரஹெர மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய அலுவலகங்களில் மாத்திரம் கிடைக்கும் இந்த சேவை, எதிர்காலத்தில் மாவட்ட அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் கொழும்பு வரை செல்லாமல் விமான நிலையத்திலேயே தமக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கப்பட்டுள்ளது.