இறுதிச் சடங்கிற்கு சென்றவர் சடலமாக மீட்பு
பொகந்தலாவை பகுதியில் உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய ஒருவர், இன்று (31) காலை கால்வாயிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கெசல்கமுவ ஓயாவுக்கு நீர் செல்லும் கால்வாயிலேயே உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொகந்தலாவை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தை
உயிரிழந்தவர், பொகந்தலாவை சப்பல்டன் தோட்டத்தைச் சேர்ந்த 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று (30) இரவு உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டுவிட்டு, நடந்துசென்று வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அவர் மர்மமான முறையில் கால்வாயில் தவறி விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் ஹட்டன் நீதவான் நேரில் சென்று விசாரணை நடத்திய பின்னர், உடலம் பிரேதப் பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொகந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.