ராஜபக்சக்கள் மீதான கோபம்: தமிழ் - சிங்கள மக்களிடையே வேறானவை!
இலங்கையின் ஆட்சிக்கதிரையில் இருந்த ராஜபக்ச தரப்பினருக்கு எதிரான சிங்கள மக்களின் கோபத்துக்கான காரணங்களும், தமிழ்மக்களின் கோபத்துக்கான காரணங்களும் வேறானவை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடி மக்களின் வாழ்வாதார பிரச்சனையாக மாறியநிலையில் இதற்கு காரணம் ஆட்சியாளர்களின் பிழையான நிர்வாகம், ஊழல் என்ற கோணத்திலேயே சிங்கள மக்களின் கோபம் கொதித்தெழுந்தது.
ஆனால் தமிழ்மக்களின் கோபம் வேறானவை. அதனால்தான் போராட்டத்தில் பங்கெடுக்காது பார்வையாளர்களாக இருந்துள்ளனர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் தெரிவிக்கையில்,
உலகத் தமிழர்களை பொறுத்தவரையில் ராஜபக்சக்களை இனப்படுகொலையாளிகளாவே பார்கின்றனர்.
2009ம் தமிழினப்படுகொலையின் வடுக்களும் ஆழ்மனக்கோபமும் மக்களிடம் ஆறாது இன்னமும் இருக்கின்து. அதனால்தான் தென்னிலங்கை மக்கள் கிளர்ச்சியின் காரணமாக ஆட்சியாளர்கள் விரட்டியடிக்கப்பட்ட போது, உலகத்தமிழ்மக்கள் தமது மகிழ்சியினை சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்தியிருந்தனர்.
ஆனால் தமிழனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கு இலங்கை அரசினையே சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்பதே தமிழர்களின் நிலைப்பாடாக இருக்கின்றது.
இதேவேளை இலங்கை ஜனாதிபதி மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் வழங்கிய பொது அறிவிப்பில்,
இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கின்ற இராணுவச் செலவினங்கள் குறைப்பு பற்றியோ, அதனோடு தொடர்புடையதாக தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவம் விலக்கப்பட வேண்டும் என்பது பற்றியோ பேசவில்லை.
இலங்கைத்தீவு முழுவதுக்குமான நிரந்த அமைதிக்கு தமிழர்களின் இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பது பற்றியோ பேசவில்லை என்பது தமிழ்மக்களிடத்தில் ஏமாற்றத்தையே தந்துள்ளது.
சிங்கள பௌத்த பேரினவாதம் ஊறிப்போயுள்ள சிறிலங்காவின் அரசியல் சமூக நீரோட்டத்தில் ஆக்கபூர்வமான சட்டத்தின் ஆட்சியினை வெளிப்படுத்துகின்ற ஓர் அரசியல் மாற்றத்தினை காணவேண்டும்.
எனில்,
- ஐ.நா மனித உரிமைச்சபை அறிவிறுத்தியபடி சர்வதேச சட்டநியமத்தின்படி ‘ரோம்’ உடன்படிக்கையின் பின்னோக்கியதாக ஒப்பமிடவேண்டும்.
- தமிழர்கள் தமது அரசியல் தலைவிதியினை தாமே தீர்மானிக்கின்ற வகையில் அதற்கான ஓர் அரசியல் வெளியினை வழங்க வேண்டும்.
- மூன்றாவதாக இராணுவச் செலவினங்களின் குறைப்பின் பிரதானபகுதியாக தமிழர் தாயகத்தில் இருந்து இராணுவம் நீக்கம் செய்யப்பட வேண்டும்.
இந்த மூன்று விடயங்களுமே தமிழர்களின் இன்றைய நிலைப்பாடு மட்டுமல்ல எதிர்பார்பாகவும் உள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.