தனியார் காணியில் புத்தர் சிலை நிறுவ முயற்சித்த பெளத்த பிக்குகளால் பதற்ற நிலை!
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலை பிரதேசத்தில் உள்ள தனியார் காணியில் புராதன சின்னங்கள் உள்ள காணியென பொய்யான பரப்புரையை முன்வைத்து புத்தர் சிலையொன்றை நிறுவ பௌத்த பிக்குகளும், சிங்கள இளைஞர்கள் சிலரும் எடுத்த முயற்சியினால் இன்று அந்த பிரதேசத்தில் சிறிய பதட்டம் நிலவியது.

ஸ்தலத்திற்க்கு நேரடியாக வருகைதந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல். தவம், அட்டாளைசேனை பிரதேச சபை தவிசாளர் ஏ. அமானுல்லா, பிரதி தவிசாளர் ஹனீபா, பாலமுனை அமைப்பாளர் அலியார், அட்டாளைசேனை பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், பிரதேச மக்கள் பலரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து அக்கரைப்பற்று பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினரின் தலையீடுகளுடன் அரசாங்க அதிபரூடாக பிரச்சினையை தீர்க்க முடிவு செய்யப்பட்டதுடன் அங்கிருந்து எல்லோரும் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை அத்துமீறி நடவடிக்கை மேற்கொண்ட தரப்புடன் கிழக்குமாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை சுமூகமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன், சம்பவ இடத்திற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை வரவழைத்து நிலமையை விளங்கப்படுத்தியிருந்தார்.

விடயங்களை மிக அவதானத்துடன் கேட்டறிந்துகொண்ட அரசாங்க அதிபர் உடனடியாக தீர்வினை வழங்குவதாக உறுதியளித்தார்.
