யாழ் வைத்தியசாலையில் பலரையும் வியக்க வைத்த ஐந்தறிவு ஜீவன் பாசம்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றுமாலை (19) பலரையும் வியக்க வைத்த , அரிதான, இதயத்தை வருடும் சம்பவம் ஒன்று நடைபெற்றது.
நேற்றுமாலை வைத்தியசாலையில் நோயாளிகளைப் பார்வையிடும் நேரம் என்பதால் உறவினர்கள் பலர் வந்து சென்றுக் கொண்டிருந்தனர்.
கண்களில் பாசம் பொங்க நோக்கிய தருணம்
இதன்போது 24ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியைச் சந்திக்க, அவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் திடீரென வைத்தியசாலைக்குள் வந்தது.
எந்த குழப்பமோ சத்தமோ ஏற்படுத்தாமல், அமைதியாக படுக்கைகளுக்கிடையே நடந்த அந்த நாய், இறுதியில் நேராக தனது உரிமையாளரின் படுக்கை அருகே சென்று நின்றது.
வாசனையால் தனது எஜமானை அடையாளம் கண்டு, கண்களில் பாசம் பொங்கி நோக்கிய அந்த தருணம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. நோயாளியும் தன் அன்பு நாயைக் கண்டதும் முகத்தில் மகிழ்ச்சி பொங்க சிரித்தார்.
அந்த சிறிய தருணமே அவருக்குப் பெரும் ஆற்றலாக அமைந்தது. அருகில் இருந்தவர்கள் பலரும், “மனிதனை விடவும் மிருகங்களின் பாசம் அதிகம்” என்று உருகி கருத்து தெரிவித்தனர்.
நாயின் அன்பும், அதற்கான நம்பிக்கையும், அதனை வளர்ப்பவர் மீதான பற்றும் அனைவரின் மனதையும் நெகிழச்செய்தது.