சாதாரண காதுக்குத்தால் நேர்ந்த சோகம் ; யாழ். போதனா வைத்தியசாலைக்கு எதிராக குற்றச்சாட்டு
காதுக்குத்து தொடர்பான சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், குறித்த மரணம் வைத்தியர்களின் தவறால் இடம்பெற்றதாகக் கூறி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
சூராவத்தை, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய வீரசிங்கம் அம்பிகைபாகன் என்பவர் கடந்த 23ஆம் திகதி காதுக் குத்து காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையின் கண், காது, தொண்டை (ENT) சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் 41ஆம் விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை (06) அங்கு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தனது தந்தையின் மரணம் வைத்தியர்களின் கவனக்குறைவு அல்லது தவறான சிகிச்சை காரணமாக ஏற்பட்டதாகக் கூறி, உயிரிழந்தவரின் மகன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மரணம் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி அன்ரலா வின்சன்தயான் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.