நாட்டில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் ; கலால் திணைக்களம் அறிவிப்பு
சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (03) மூடப்படவுள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களிலும் நாளை மது விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுபானசாலைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்டறிவதற்காக நாடளாவிய ரீதியில் சோதனைகளை முன்னெடுக்குமாறு கலால் திணைக்கள நாயகம் எம்.பி.என்.ஏ. பெமரத்ன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக உரிம நிபந்தனைகளை மீறும் மதுபான விற்பனை நிலையங்கள் தொடர்பில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு, சட்டத்தை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் ஒக்டோபர் 3ஆம் திகதி சர்வதேச மது ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.