இரட்டை குழந்தைகள் மற்றும் தாயை பலியெடுத்த மதுபோதை!
இந்தியாவின் கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய டிரக் டிரைவர், பைக் மீது மோதியதில் இரட்டை குழந்தைகள் மற்றும் அவர்களது தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றையதினம் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. கர்நாடகாவின் ஹாசன் நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தனது மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளுடன் சிவானந்தன் என்பவர் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக எதிரில் வந்த டிரக் ஒன்று அவர்கள் மீது மோதியதில் 4 பேரும் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தாய் ஜோதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தந்தை சிவானந்தன் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய டிரக் டிரைவரை பொலிஸார் உடனடியாக கைதுசெய்த நிலையில், விசாரணையில் அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.