மீண்டும் இலங்கையுடனான போக்குவரத்தை ஆரம்பிக்கும் விமான நிறுவனங்கள்!
எயார் பிரான்ஸ் மற்றும் கேஎல்எம் ஏர்லைன்ஸ் ஆகிய விமான சேவைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் கொழும்புக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதன்படி இந்த விமான நிறுவனங்கள் வாரத்திற்கு நான்கு விமானங்களை இலங்கைக்கு இயக்கவுள்ளன.
சேவையை அதிகரித்த விமானங்கள்
அதேசமயம் மேலும் பல விமான நிறுவனங்களும் சமீபத்திய வாரங்களில் கொழும்புக்கான விமானங்களை மீண்டும் தொடங்க அல்லது வாராந்த பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப்போவதாக அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அந்தவகையில் ரஷ்யா மற்றும் இந்திய விமான நிறுவனங்கள் இலங்கைக்கான பயணங்களின் அதிகரிப்பை உறுதிப்படுத்தியுள்ளன. கொவிட்-18 தொற்றுநோய் மற்றும் சமீபத்தில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக விமானச் செயற்பாடுகள் தடைபட்டன.
எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு விமான சேவைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு சலுகைகளை வழங்கி வருகின்றது.
இந்திய பிரஜைகளை இலங்கைக்கு வருகைத் தருவதை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவில் வீதி நிகழ்ச்சிகளையும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஏற்பாடு செய்திருந்தார்.
அதேவேளை அந்நியச் செலாவணிக்காக இலங்கை சுற்றுலாத் துறையை பெரிதும் நம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.