யாழில் காற்றில் பறந்த தனிமைப்படுத்தல் விதிமுறை; அதிகாரிகளை ஏமாற்றி இடம்பெற்ற திருவிழா
யாழில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் சுகாதார அதிகாரிகளை ஏமாற்றி கைதடி, நவபுரம் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இன்று ஆலய திருவிழா நடைபெற்றமை தொடர்பில் விசனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
நவபுரம் பகுதியிலுள்ள துர்க்கை அம்மன் கோயிலின் தீர்த்த திருவிழாவான இன்று, சுகாதார விதிமுறைகளை மீறி திருவிழா இடம்பெற்றது. இதன்போது அயலிலுள்ள இன்னொரு ஆலயத்திலிருந்து காவடியுடன் பக்தர்கள் வீதி வழியாக ஆலயத்திற்கு வந்து, திருவிழா இடம்பெற்றது.
ஆலய திருவிழாவை 50 இற்குட்பட்ட பக்தர்களுடன், ஆலய உள்வீதியில் மட்டும் சுகாதார பிரிவினரால் அறிவுறுத்தப்பட்டது. எனினும் இன்று சுகாதார விதிமுறைகளை மீறி பெருமளவான பக்தர்கள் குவிந்து திருவிழா இடம்பெற்றது.
கலந்து கொண்டிருந்த பக்தர்களில் பலர் முகக்கவசமும் அணிந்திருக்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும் தனிமைப்படுத்தல் உத்தரவை மீறி இடம்பெற்ற இந்த விவகாரம் தொடர்பாக சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை யாழில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில், சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை உதாசீனம் செய்து மக்கள் இவ்வாறு சமூக பொறுப்பின்றி செயல்படுவது தொடர்பில் பலரும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.