68 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கைமாறிய ஏர் இந்தியா!
பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தை 68 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டு டாடா குழுமம் ஏலத்தில் எடுத்துள்ளது.
1932-ல் டாடா ஏர்லைன்ஸ் ஆக இருந்த ஏர் இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனம், சுதந்திரத்திற்கு பிறகு பொதுத்துறை நிறுவனமாக கையகப்படுத்தப்பட்டது.
அப்போது அதிகளவிலான தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் இல்லாத காலத்தில், அசத்தலான மகாராஜா சின்னத்துடன் உலக நாடுகளிடையே பயணிகளை சுமந்தபடி உலா வந்தது ஏர் இந்தியா.
ஒருகாலத்தில் லாபத்தில் இயங்கிய இந்த நிறுவனம், தொழில் போட்டி, அதிகரித்த நிர்வாகச் செலவு, அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு அரசு சார்ந்த சலுகைகள் போன்ற பல்வேறு காரணங்களால், சரிவை நோக்கி நகரத் தொடங்கியது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்றுவிட முடிவு செய்தது. அதன்படி , ஏர் இந்தியாவை டாடா குழுமத்திற்கு விற்பதற்கான அதிகாரிகளின் பரிந்துரைக்கு, இதற்கான மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.
ஏர் இந்தியாவால் அரசுக்கு தினமும் 20 கோடி ரூபாய் என்றளவில், இதுவரை மொத்தம் 70 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் பங்குகளை விற்க முடிவு செய்தபோது, எந்த நிறுவனமும் ஏர் இந்தியாவை வாங்க முன்வரவில்லை என்பதனால் நிபந்தனைகள் மேலும் எளிமையாக்கப்பட்டன.
அத்துடன் விண்ணப்பிப்பதற்கான திகதியும் பலமுறை நீட்டிக்கப்பட்டது. எனினும் , அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகள் கடந்தும் போதிய விண்ணப்பங்கள் கூட வரவில்லை. இதனிடையே, ஏர் இந்தியாவை தோற்றுவித்த டாடா குழுமம், அதனை வாங்கிக்கொள்ள விருப்பம் தெரிவித்தது.
இந்நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை ரூ.18,000 கோடிக்கு டாடா குழுமத்திற்கு விற்கப்பட்டதாக இந்திய மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.