உலகை உலுக்கிய விமான விபத்து ; உயிரிழந்தவர்களின் உடல் பாகங்களில் பெரும் மோசடி
எயார் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த பிரிட்டிஷ் பிரஜையான ஷோபனா படேலின் சவப்பெட்டியில், மற்றொரு நபரின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவரது மகன் மிட்டன் படேல் தெரிவித்துள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளன.
ஜூன் மாதம் அஹமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்தை நோக்கிச் சென்ற எயார் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 260 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஷோபனா படேலும், அவரது கணவரும் உயிரிழந்துள்ளனர்.
சடலங்களில் தவறுகள்
விபத்துக்குப் பிறகு பிரிட்டனுக்கு கொண்டு வரப்பட்ட அவர்களின் சடலங்களில் தவறுகள் ஏற்பட்டுள்ளதற்கான தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. மற்றொரு நபரின் உடல் பாகங்கள் கலந்து இருந்தது பிரேத பரிசோதனை நிபுணரால் கண்டறியப்பட்டதாக மிட்டன் கூறினார்.
“இன்னும் எத்தனை பேர் உள்ளே இருக்கிறார்கள்?” என அதிர்ச்சியுடன் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த செய்தியில் சில குடும்பங்களுக்கு தவறான சடலங்கள் அனுப்பப்பட்டதாகவும், ஒரு குடும்பத்திற்கு முற்றிலும் வேறு நபரின் உடலே அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டது.
மேலும், மற்றொரு குடும்பத்திற்கு அனுப்பப்பட்ட சவப்பெட்டியில் பல நபர்களின் உடல் பாகங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில், இந்திய வெளியுறவு அமைச்சகம் பதிலளிக்கையில், உயிரிழந்தவர்களின் சடலங்கள் “தொழில்முறை ரீதியிலும், மரியாதையுடனும் கையாளப்பட்டுள்ளன” என்று தெரிவித்தது.
குறித்த குழப்பங்களைச் சந்தித்த குடும்பங்களின் கவலைகளை தீர்க்கும் பொருட்டு, பிரிட்டன் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அது தெரிவித்துள்ளது. மிட்டன் படேல், தனது பெற்றோர்களை இழந்ததால் ஏற்பட்ட சோகத்தின் மத்தியிலும், இந்த தவறுகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாக கூறினார்.
“அதிகாரிகள் சோர்வாக இருந்தனர், அழுத்தம் கொண்டிருந்தனர். ஆனால், சரியான உடல்களை அனுப்புவது குறைந்தபட்சமான பொறுப்பாக இருக்க வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார். “என் தாயுடன் சவப்பெட்டியில் வேறு நபர்களின் உடல் பாகங்கள் இல்லை என்பதைக் குறித்து என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை,” என்று அவர் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.