குழந்தைகளுடன் நல்ல தொடர்பாடலைப் பேணுவது பெரியவர்களின் பொறுப்பு ; பிரதமர் ஹரிணி
குழந்தைகளைப் புரிந்துகொள்வதற்கு அவர்களின் மனநிலைக்கு ஏற்ப சிந்திக்கப் பழக வேண்டும் என்றும், குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க இருசாராருக்கும் இடையே நல்ல தொடர்பாடலைப் பேணுவது அத்தியாவசியமானது என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று (11) பிரதமர் அலுவலக நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் தின விழாவில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் "குழந்தைகளே நமது உலகம் அவர்களின் எதிர்காலத்தைச் சிறப்பானதாக மாற்றுவதற்கு நம்மால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றதாகவும் பெற்றோராகவும் பெரியவர்களாகவும் நமக்கு இருக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று, குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், இன்றைய குழந்தைகள் நம்மை விடத் தொழில்நுட்பத்தில் மிகவும் அறிவார்ந்தவர்களாக இருக்கிறார்கள், எனவே பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே நல்ல தொடர்பாடலைப் பேணுவதன் மூலம் இந்த இடைவெளியைக் குறைப்பது பெரியவர்களாகிய நமது பொறுப்பாகும்." எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமர் அலுவலக நலன்புரிச் சங்கத் தலைவரும் சிரேஷ்ட உதவிச் செயலாளருமான வத்சலா அதிகால மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள், நலன்புரிச் சங்க உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டனர்.