நாடாளுமன்றத்திற்கு செல்லும் ஆதிவாசிகளின் தலைவர்!
இலங்கையின் பழங்குடியினரான ஆதிவாதி ஒருவர் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட வேண்டும் என ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஹெத்தோ தெரிவித்துள்ளார்.
தம்பானையில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். பதுளை,மொனராகலை,அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்நறுவை ஆகிய மாவட்டங்களில் ஜந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆதிவாசிகள் உள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் ஆதிவாசிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. எமது நாட்டில் முதல் முறையாக ஆதிவாசி யுவதி ஒருவர் பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
ஹென்னானிகல பகுதியில் வாழும் அந்த யுவதி எனது மருமகள். எனினும் இந்த நாட்டின் ஆரம்ப உரிமையாளர்களான பழைய குடியினரான ஆதிவாசிகளுக்கு இன்னும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என அவர் கூறினார்.
இது குறித்து நான் நீண்டகாலமாக பேசி வருகின்றேன்.ஆதிவாசிகளின் பிரச்சினைகளை பற்றி பேச தனியான அமைச்சு ஒன்றை ஏற்படுத்துமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்தேன்.
ஆதிவாசிகள் பற்றி ஓரிரு வாரங்கள் பேசுவார்கள் அதன் பின்னர் மறந்து விடுவார்கள். பல இனங்களை பற்றி பேச நாடாளுமன்றத்தில் யாராவது இருக்கின்றனர்.
ஆதிவாசிகளின் பிரதிநிதி ஒருவர் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.