முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து குறித்து விமர்சித்த நடிகை காயத்ரி ரகுராம்!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று கூடியதும் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியபோது, பெரியார் பிறந்த நாளான செப்.,17ம் திகதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என அவர் அறிவித்தார்.
இதன்போது, இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ அடித்தளம் அமைத்தவர் பெரியார் என்றும், பெரியார் எழுதிய எழுத்துகள், பேசிய பேச்சுகள் யாரும் எழுத, பேச தயங்கியவை எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், சமூக நீதி நாள் என்றால் என்ன என்பது குறித்து பாஜக பிரமுகரான காயத்ரி ரகுராம் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,
“மிக முக்கியமாக உண்மையான சமூக நீதி தினம் என்பது ஒற்றை குடும்ப வம்ச ஆட்சியை நாம் தேர்வு செய்யாதபோது (மற்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுப்பது) மற்றும் மக்கள் தங்கள் பஞ்சமி நிலத்தை திரும்பப் பெறுவது, பெண்களுக்கு மரியாதை அளிப்பது, 50 % அதிகாரம் வழங்குவது, கோவில் இழந்த நிலம் திரும்ப பெறுவது, கோவில்களை திரும்ப இந்து மக்களிடம் ஒப்படைப்பது, மத மாற்றத்தை நிறுத்துவது, ஒரே மாதிரியான சிவில் கோட் கொண்டுவருவது இது தான் உண்மையான சமூக நீதி நாள். மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுக குடும்ப ஆட்சிக்கு எதிராகவும், முரசொலியின் பஞ்சமி நில விவகாரத்தை மறைமுகமாக அவர் குறிப்பிட்டு பேசியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் காயத்ரி ரகுராமின் இந்தக் கருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.