உக்ரைனுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட நடிகை ஹாலிவுட் நடிகை!
ரஷ்யாவின் தாக்குதலில் பாதித்த உக்ரைன் நாட்டிற்கு திடீர் பயணம் மேற்கொண்ட ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, (Angelina Jolie) அங்குள்ள குழந்தைகளிடம் பேசி உற்சாகமூட்டினார்.
46 வயதான ஏஞ்சலினா ஜோலி, ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர் மக்கள் பிரிவின் சிறப்பு தூதராக உள்ளார்.
லீவ் பிராந்திய கவர்னர் இந்த தகவலை டெலிகிராமில் கூறினார்.
இது குறித்து லீவ் கவர்னர் கூறியதாவது,
லிவிவில் தஞ்சம் அடைந்துள்ள இடம்பெயர்ந்த மக்களுடன் பேச நடிகை ஏஞ்சலினா ஜோலி வந்திருந்தார். ஏப்ரல் தொடக்கத்தில் உக்ரைனின் கிராமடோர்ஸ்க் ரெயில் நிலையத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைத்து நடத்தப்பட்ட ரஷிய படைகளின் ஏவுகணைத் தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில், காயங்களுக்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுடன் பேசுவதற்காக நடிகை ஏஞ்சலினா ஜோலி வந்திருந்தார்.
அவருடைய இந்த திடீர் எதிர்பாராத வருகை, எங்கள் அனைவருக்கும் முற்றிலும் ஆச்சரியமாக இருந்தது.
லிவிவ் பகுதியில் நடிகை ஏஞ்சலினா ஜோலியைப் பார்த்த பலரால், அது உண்மையில் அவர்தான் என்பதை நம்ப முடியவில்லை. லிவிவ் நகருக்கு சென்ற அவர், அங்குள்ள மக்கள், குழந்தைகளிடம் பேசி உற்சாகப்படுத்தினார்.
அங்குள்ள ரெயில் நிலையங்களில் பணிபுரியும் தன்னார்வலர்களிடம் பேசிய ஏஞ்சலினா, அவர்களிடம் போர் பாதித்த மக்களின் நிலைமை குறித்து கேட்டறிந்தார்.
அங்கு மனநல மருத்துவர்கள் பணியில் உள்ளதாகவும், தினமும் ஒவ்வொரு மருத்துவரும் 15 பேரிடம் பேசி ஆலோசனை வழங்குவதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கவர்னர் கூறினார்.
அத்துடன் 2 முதல் 10 வயது குழந்தைகளே அங்கு அதிகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அங்குள்ள சிறுவர், சிறுமியர்களுடன் பேசி புகைப்படம் எடுத்து அவற்றை ஏஞ்சலினா மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து ஏஞ்சலினா கூறியதாவது,
"அவர்களின் அதிர்ச்சியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. குழந்தைகள் சந்திக்கும் வலியை நான் உணர்கிறேன். யாராவது அவர்களை தேற்றினால் அது அவர்களுக்கு மேம்பட்ட உணர்வை தரும்" என்றார்.
மேலும், இந்த சந்திப்பின் போது ஒரு சிறுமி தனக்கு வந்த கனவை ஏஞ்சலினா ஜோலியிடம் கூறி பகிர்ந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, போர் பாதிப்புக்குள்ளான ஏமனுக்கு, கடந்த மாதம் ஐநா சிறப்பு தூதராக ஏஞ்சலினா பயணம் செய்து அங்குள்ள மக்களை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.