நடிகர் ரஜினிகாந்தின் வீட்டுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்
நடிகர் ரஜினிகாந்தின் வீட்டுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோவில்கள், விமான நிலையங்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் இல்லங்கள், முன்னணி செய்தி நிறுவனங்களின் அலுவலகங்கள், சினிமா பிரபலங்களின் வீடுகள் மற்றும் நீதிமன்றங்கள் போன்ற முக்கிய இடங்களில் குண்டு வெடிக்கும் என அச்சுறுத்தல்கள் வந்துள்ளன.
வெடிகுண்டு மிரட்டல்
இது மக்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் அச்சுறுத்தல்களால் பாதுகாப்புப் பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வரிசையில், தற்போது சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தல் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்தவுடன், தேனாம்பேட்டை பொலிஸார் விரைந்து செயல்பட்டனர்.
வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவினர், நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பல மணி நேர சோதனைகளுக்குப் பிறகு, அந்த அச்சுறுத்தல் வெறும் புரளி என்று உறுதிப்படுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், தொடர்ந்து வரும் இந்த வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் குறித்து இணையக்குற்ற பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.