காருக்குள் சடலமாக கிடந்த பெண் வைத்தியரின் விசாரணையில் அதிரடி நடவடிக்கை
தெல்தெனிய பகுதியில் உடலமாக மீட்கப்பட்ட பெண் பிசியோதெரபிஸ்டின் மரணம் தொடர்பான விசாரணையில், யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரான காதலனுக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டு மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் குண்டசாலை பிரதேச சபையின் சாரதி எனவும், இவர் பல்லேகலை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தின் பிரதான சந்தேகநபரான காதலன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் இன்று (24) காலை யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
வலான ஊழல் தடுப்புப் படையணி மற்றும் யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் இருவரும் அடையாளத்தை மாற்றி, வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்தில் பயணிப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அப்பேருந்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்கள் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.