அரச உத்தியோகத்தர் போல் நாடகமாடி பணம் மோசடி: அம்பலப்படுத்திய மக்கள்!
திருகோணமலை - கந்தளாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் அரச உத்தியோகத்தர் என்று தன்னை அறிமுகப்படுத்தி நபரொருவர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
வயோதிபர்களிடம் அஸ்வெசும திட்டத்தில் தங்களின் பெயர் வந்துள்ளது என்று கூறி பணம் மோசடியில் ஈடுபட்ட ஒருவரை அப்பகுதி மக்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கந்தளாய் ஆரியவங்ச மாவத்தை வாத்தியகம வட்டுக்கச்சி மற்றும் லைட்வீதி போன்ற பகுதிகளில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு அஸ்வெசும திட்டத்தில் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி இப்பகுதிகளில் 4000 மற்றும் 5000 ரூபாய் பெற்றுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் நடமாடியமை தொடர்பாக அப்பகுதிகளில் பொறுத்தப்பட்டுள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.