தமிழர்களுக்கு போலி விசா பெற்றுக்கொடுத்ததாக குற்றச்சாட்டு ; 24 வயது இளைஞர் பிரித்தானியாவில் கைது
இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் பிரித்தானிய விசாவைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி மோசடியில் ஈடுபடும் முகவர்களுக்கு எதிராக பிரித்தானியாவில் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குடிவரவுச் சட்டத்தின் கீழ், பர்மிங்காம் பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்மெத்விக் பகுதியைச் சேர்ந்த ஜெம்ராஜ் என்பவரே தேசிய குற்றத்தடுப்பு முகமை மற்றும் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி விசாக்கள் மற்றும் புகலிடக் கோரிக்கைகள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் விளம்பரங்களை வெளியிட்டு வந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குடிவரவு அதிகாரிகளின் கண்காணிப்பு நடவடிக்கையின்போது, அவரது சமூக வலைத்தளப் பதிவுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாகக் கொண்டுவரப்பட்ட Border Security, Asylum and Immigration Act 2025 சட்டத்தின் 17ஆவது பிரிவின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், 1999ஆம் ஆண்டின் சட்டத்திற்கு முரணாக சட்டவிரோதமான முறையில் குடிவரவு தொடர்பான ஆலோசனைகளை வழங்கியதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த இளைஞர் பர்மிங்காம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய குற்றத்தடுப்பு முகமை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், போலி ஆவணங்கள் மற்றும் சட்டவிரோத குடிவரவு ஆலோசனைகள் மூலம் பிரித்தானியாவுக்கு செல்ல முயற்சிப்பவர்களை இலக்காகக் கொண்டு மோசடியில் ஈடுபடும் நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.