கிளிநொச்சியில் பரிதாபமாக உயிரிழந்த குழந்தை... மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்!
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 2 வயது குழந்தை உயிரிழந்ததுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றிரவு (25-12-2024) 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
A9 வீதியால் பயணித்த ரிப்பர் வாகனம் குறித்த மோட்டார் சைக்கிளை மோதி விபத்தினை ஏற்படுத்தியதுடன், விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்து சுமார் 100 மீட்டர் பாதையை விட்டு விலகி பயணித்துள்ளது.
விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளையும் ரிப்பர் வாகனம் குறிப்பிட்ட அளவு தூரம் இழுத்து சென்றுள்ளதுடன், தொழிற்பயிற்சி நிறுவனத்தின் விளம்பர பலகை மற்றும் தொலைத்தொடர்பு கம்பம் உள்ளிட்டவற்றையும் சேதப்படுத்தியுள்ளது.
சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 வயது குழந்தை உயிரிழந்ததுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் 6 வயதுடைய சிறுவன் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், ரிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி மதுபோதையில் இருந்ததாக சம்பவ இடத்தில் நின்ற மக்கள் குறிப்பிடுகின்றனர்.
விபத்து தொடர்பில் ரிப்பர் வாகன சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பூர்வாங்க விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.