பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்; கம்பி எண்ணும் அரசியவாதி
'சாந்தி கர்மம்' (தோஷ நிவர்த்திப் பூஜை) செய்து தருவதாகக் கூறி, பாடசாலை மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) அரநாயக்க தொகுதி அமைப்பாளரும், தற்போதைய அரநாயக்க பிரதேச சபை உறுப்பினருமான நபரை எதிர் வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அரநாயக்க பிரதேசத்தில் வசிக்கும் அசங்க தீபால் பதுவத்த (வயது 40) என்றவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சாந்தி கர்மம் செய்து தருவதாகக் கூறி பாலியல் அத்துமீறல்
சந்தேக நபர், மாவனல்லை - ஹெம்மாத்தகம வீதியில் உள்ள ருவன்தெனிய, கெகிரிகொட பிரதேசத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அங்கு 'தேவாலயம்' (பூஜை கூடம்) ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
மாவனல்லை, ஹிங்குல கணேதென்ன பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர், இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர் தர (A/L) பரீட்சைக்குத் தோற்றவிருந்தார்.
அந்த மாணவியின் கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தோஷங்களை நீக்குவதற்காகச் சாந்தி கர்மம் செய்து தருவதாகக் கூறி, மாணவியை வரவழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து மாவனல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.