பெண்ணாக நடித்து பிக்குகளை ஏமாற்றிய பல்கலை மாணவன்
ஒரு பெண்ணைப் போல ஆள்மாறாட்டம் செய்து பிக்குகளிடம் பணம் மோசடி செய்த இளைஞன் ஒருவர் குற்றப் புலனாய்வுத் துறையின் இணைய புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட நபர் தொடர்பாக 17 பிக்குகள் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அளித்த புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின்படி குறித்த கைது இடம் பெற்றுள்ளது.
பண மோசடி செய்த பல்கலை மாணவன்
கைது செய்யப்பட்ட நபர் தலாவ பகுதியைச் சேர்ந்தவர் என்றும், மாலபே பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் உயர் கல்வி பயின்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் முகபுத்தகத்தில் ஒரு பிக்குகள் குழுவில் சேர்ந்து, இளம் பெண்ணாக உருவாக்கப்பட்ட போலி முகபுத்தக கணக்கின் மூலம் துறவிகளுடன் செய்திகளைப் பரிமாறிக் கொண்டு உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
தனது குரலை மாற்றி பிக்குகளிடம் ஒரு பெண்ணாகப் பேசியுள்ளதுடன், வீடியோ அழைப்புகளை மேற்கொண்டு தவறான படங்களை காண்பித்து துறவிகளின் செயல்பாடுகளை காணொளியாக பிடித்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் பதிவு செய்யப்பட்ட காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி அவர்களிடம் பணம் கேட்டுள்ளதாகவும், பணம் கொடுக்க மறுக்கும் பிக்குகளின் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சில பிக்குகள் சந்தேக நபருக்கு 50,000 வரை பணத்தை வழங்கியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறையின் இணைய விசாரணைகள் மற்றும் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.