வடக்கின் காணிப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு
வடக்கின் காணிப்பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, வெகு விரைவில் மக்களுக்கு மீண்டும் காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் யாழில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று (31) நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது ஜனாதிபதி மேலும் கூறுகையில்,
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை
நாட்டின் அபிவிருத்திக்காக அல்லது பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டின் எந்தப் பகுதியிலும் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்க முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்தக் காணிகளுக்குப் பதிலாக கட்டாயமாக மாற்றுக் காணிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
யாழ்.மக்களுக்கான மிக முக்கியமான திட்டங்களுக்காக யாழ். ஜனாதிபதி மாளிகையை முற்றாக விடுவிக்கத் தயாரெனவும் , அதற்கான உரிய முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
போரினால் இடம்பெயர்ந்த குடும்பங்கள் இன்னும் வடமாகாணத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இது குறித்து ஆராய்ந்து விரைவான தீர்மானங்களை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுகாதாரம், கடற்றொழில்,சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு,போக்குவரத்து பிரச்சினைகள்,ஆளணி குறைபாடு,காணி விடுவிப்பு உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டன.
யாழ் மாவட்டத்தில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் ஜனாதிபதிக்கு முன்வைத்தனர்.
அதில் அநேக பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி உடனுக்குடன் தீர்வு வழங்கியதோடு அவை தொடர்பில் கலந்து கொண்ட வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி அனுரகுமார பணிப்புரைகளை வழங்கினார்.