நீதிமன்ற சிறைச்சாலையில் விபரீத முடிவை எடுத்த கைதி ஒருவர்!
நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட கைதிகளில் ஒருவர் நீதிமன்ற சிறைக்கூடத்தில் வைத்து தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் புத்தளம் நீதிமன்றத்தில், இன்று (05.10.2023) காலை 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது என புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் நுரைச்சோலைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கப்புஹேன கனேமுல்ல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சமிந்த திஸாநாயக்கவே இவ்வாறு தவறான முடிவை எடுத்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு புத்தளம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். சி ஹதுருசிங்ஹ வருகை தந்து சடலத்தை நேரில் பார்வையிட்ட பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.