திட்டமிட்டு எடுக்கப்பட்ட TikTok காணொளி ; சித்திரவதை வீடியோ தொடர்பில் உண்மை வெளிச்சம்
"கடையில் ஆடை திருடியவர்களுக்கு இதுதான் தண்டனை, இதற்கு காவல்துறை தேவையில்லை" என்ற வாசகத்துடன், நபர் ஒருவரைத் தலைகீழாகத் தொங்கவிட்டு சித்திரவதை செய்வது போன்ற காணொளியொன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்த விசாரணையில், இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட ஒரு போலி 'டிக்டொக்' (TikTok) காணொளி என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 23 ஆம் திகதி கட்டுநாயக்க பகுதியை வீடொன்றின் உரிமையாளர் (45 வயது) தனது குடும்பத்தாருடன் அனுராதபுரத்துக்கு சுற்றுலா சென்றிருந்த வேளையில், வீட்டைப் பாதுகாப்பதற்காக 39 வயதுடைய நண்பர் ஒருவரை அமர்த்தியுள்ளார்.
26 ஆம் திகதி இரவு உரிமையாளர் வீடு திரும்பியதும், அங்கிருந்த மூவர் இணைந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, "யாரால் தலைகீழாகத் தொங்க முடியும்? அப்படிச் செய்பவருக்கு ஒரு மதுபான போத்தல் பரிசாக வழங்கப்படும்" என உரிமையாளர் சவால் விடுத்துள்ளார்.

மதுவுக்கு ஆசைப்பட்ட 39 வயதுடைய நபர், தானே கயிற்றைக் கொண்டு வந்து தனது கால்களைக் கட்டியுள்ளார்.
பின்னர் ஏனையோர் வீட்டின் முன்னாலுள்ள மாமரத்தில் அவரைத் தலைகீழாகத் தொங்கவிட்டுள்ளனர்.
சுமார் மூன்று நிமிடங்கள் அந்த நபர் தலைகீழாகத் தொங்கியபோது, உரிமையாளர் தனது குரலில் "திருடர்களுக்கு இதுதான் தண்டனை, காவல்துறையால் ஒன்றும் செய்ய முடியாது" என வசனம் பேசி காணொளி பதிவுசெய்துள்ளார்.
பின்னர் அதனைச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர். காணொளி எடுத்து முடிந்ததும், மூவரும் வாகனங்களில் ஏறி தத்தம் வீடுகளுக்குச் சென்று நிம்மதியாக உறங்கியுள்ளனர்.
இந்த காணொளி சமூகத்தில் பெரும் அச்சத்தையும், சட்ட ஒழுங்கு குறித்த தவறான புரிதலையும் ஏற்படுத்தியிருப்பதால், சம்பந்தப்பட்ட மூவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தீர்மானித்துள்ளனர்.
பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் மற்றும் சமூக வலைத்தளங்களைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் இது குறித்து சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன.
கட்டுநாயக்க காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.