யாழில் நேர்ந்த சோகம் ; நண்பர்களுடன் கடற்கரையில் நீராடிய இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் நண்பர்களுடன் கடலில் நீராடிய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாழையடி பகுதியில் நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் கடலில் பல்டி அடித்தபோது தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
தன்னுடைய நண்பன் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஒன்பது நண்பர்கள் இணைந்து உழவு இயந்திரத்தில் பளை கரந்தாய் பகுதியில் இருந்து இன்று (18) மதியம் தாளையடி கடற்கரைக்கு வருகை தந்துள்ளனர்.
பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருந்த நண்பர்கள் கடல் விளையாட்டுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது தலையில் காயமுற்ற இளைஞரை உடனடியாக நண்பர்கள் மீட்டு உழவு இயந்திரத்தில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவரை பரிசோதித்த வைத்தியர் இளைஞன் ஏற்கனவே உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார்.
உயிரிழந்த இளைஞரின் உடலம் பிரேதப் பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிஸார் சக நண்பர்களிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.