இலங்கையின் வலுசக்தி துறையில் பாரிய மாற்றம்
நாட்டின் நிலையான தேசிய வளர்ச்சிக்கான முன்னுரிமைத் துறையாக வலுசக்தித் துறையை (Energy Sector) அங்கீகரித்து, அதனை மேம்படுத்துவதற்காக விசேட நிபுணர் குழுவொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முக்கிய பொருளாதாரத் துறைகளுக்கு இடையே நிலவும் ஒருங்கிணைப்பு குறைபாடுகள் காரணமாக, வலுசக்தித் துறையில் முதலீடுகள் செய்ய முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருவதை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஒருங்கிணைந்த பொருளாதார அபிவிருத்தி கட்டமைப்பு அவசியம் என 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வலியுறுத்தியிருந்தார்.
ஜனாதிபதியின் இந்த வழிகாட்டலின் அடிப்படையில், கலாநிதி ஹான்ஸ் விஜேசுரிய (Dr. Hans Wijesuriya) தலைமையில் இந்த விசேட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
நீண்டகால அபிவிருத்தி இலக்குகளுக்கு ஏற்ப வலுசக்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான தேசிய கொள்கைகள், உத்திகள் மற்றும் அமுலாக்கக் கட்டமைப்புகளை உருவாக்குவது இக்குழுவின் பிரதான பணியாகும்.