மீண்டும் மாணவிகளுக்கு இலவச சுகாதார அணையாடை திட்டம் ; அரசின் முக்கிய தீர்மானம்
வயது வந்த பாடசாலை மாணவிகளின் கல்வி நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வதை உறுதிப்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டிலும் அவர்களுக்கு இலவச சுகாதார அணையாடை (Sanitary Napkins) வழங்கும் திட்டத்தை தொடர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் சமர்ப்பித்த இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதனடிப்படையில், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரச உதவி பெறும் விசேட பாடசாலைகளில் தரம் 6 இற்கு மேல் கல்வி பயிலும் சுமார் 1.05 மில்லியன் (10 இலட்சத்து 50 ஆயிரம்) மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறவுள்ளனர்.

ஒவ்வொரு மாணவிக்கும் தலா 720 ரூபாய் பெறுமதியான இரண்டு பரிசுச் சீட்டுகள் (Gift Certificates) வழங்கப்படும். இதன் மூலம் ஒரு மாணவிக்கு வருடாந்தம் 1,440 ரூபாய் பெறுமதியான வவுச்சர்கள் கிடைக்கப்பெறும்.
இந்த வவுச்சர்களைப் பயன்படுத்தி மாணவிகள் தமக்குத் தேவையானசுகாதார சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்ய முடியும்.(உதாரணமாக, 120 ரூபாய் பெறுமதியான 12 பக்கெட்டுகள் அல்லது 180 ரூபாய் பெறுமதியான 8 பக்கெட்டுகள் வரை பெற்றுக்கொள்ளலாம்).
மாதவிடாய் சுகாதாரத் தேவைகள் மாணவிகளின் கல்விக்கு ஒரு தடையாக அமையக் கூடாது என்பதையும், இதன் காரணமாக மாணவிகள் பாடசாலைக்கு சமூகமளிக்காமல் இருப்பதை தவிர்ப்பதையுமே இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.