ஊறுகாய் வைக்காதது குற்றமாடா....ஹோட்டலுக்கு 35 , 000 ரூபா அபராதம்!
சாப்பாடு பொதியில் ஊறுகாய் வைக்காத , ஹோட்டல் உரிமையாளருக்கு ரூ.35,525அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று தமிழகத்தில் பதிவாகியுள்ளது.
பரபரப்ரை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
விழுப்புரம், வழுதரெட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்க மாநில தலைவராக உள்ளார்.
நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு
இவர் தன் உறவினரின் நினைவு தினத்தையொட்டி, 25 பேருக்கு அன்னதானம் வழங்குவதற்காக, 2022ஆம் ஆண்டு விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பணம் செலுத்தி, 25 பார்சல் சாப்பாடு வாங்கியுள்ளார்.
பார்சல் சாப்பாடிற்கான ரசீதை தர மறுத்த ஹோட்டல் உரிமையாளர் துண்டு சீட்டில் எழுதி கொடுத்துள்ளார். வீட்டிற்கு சென்ற ஆரோக்கியசாமி, உணவு பொட்டலங்களை முதியோருக்கு வழங்கியபோது, அதில் ஊறுகாய் இருக்கவில்லை.
இதனையடுத்து ஹோட்டல் உரிமையாளரிடம் கேட்டபோது, ஊறுகாய் வைக்காதது உறுதியான நிலையில், ஊறுகாய்க்கான 25 ரூபாயை திரும்பக் கேட்டுள்ளார் ஆரோக்கியசாமி.
ஆனால், ஹோட்டல் உரிமையாளர் தர மறுத்துவிட்டார்.
இந்நிலையில் ஆரோக்கியசாமி, விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மக்களின் கவனம் ஈர்த்த தீர்ப்பு
வழக்கை விசாரித்த குறைதீர் ஆணைய தலைவர், பார்சல் உணவில் ஊறுகாய் வைக்காததால், ஆரோக்கியசாமிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ 30,000, வழக்கு செலவிற்கு ரூ 5,000 மற்றும் ஊறுகாய் பக்கெட்டுகளுக்குரிய 25 ரூபாய் என எல்லாவற்றையும் சேர்த்து 35, 525ரூபாயை வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளது.
அதோடு , 45 நாட்களில் குறித்த தொகையை வாடிக்கையாளருக்கு வழங்க ஹோட்டல் உரிமையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊறுகாய் வழங்காத உணவகத்திற்கு ரூ.35,000 அபராதம் விதித்து விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்ட சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.