மகனை காப்பாற்ற போராடி உயிரை விட்ட தந்தை ; இலங்கையில் பெரும் துயரை ஏற்படுத்திய சம்பவம்
அநுராதபுரம், மிஹிந்தலை, இலுப்புகன்னிய பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மிஹிந்தலை இலுப்புகன்னிய பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் ஆவார். சம்பவத்தன்று, உயிரிழந்த தந்தையின் மகன் வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

சிகிச்சையில் மகன்
மகன் அலறும் சத்தம் கேட்டதால், தந்தை வீட்டிற்கு வெளியில் சென்று பார்த்த போது மகனை சுற்றி குளவி கூட்டம் இருந்துள்ள நிலையில், மகனை காப்பாற்றுவதற்காக தந்தை தனது சட்டையைக் கழற்றி மகனை சுற்றிக் கட்டியுள்ளார்.
ஆனால் தந்தை குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குளவி கொட்டுக்கு இலக்காகிய 11 வயதுடைய மகன் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வீட்டில் மகனும் தந்தையும் மட்டுமே வசித்து வந்துள்ளதாகவும் தாயார் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.