பிளவடைந்த ஐக்கிய மக்கள் சக்தி? திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட முக்கிய தகவல்
ஐக்கிய மக்கள் சக்திக்குள் காணப்படும் கருத்து முரண்பாடுகள் கட்சியின் பிளவுக்கு ஒரு போதும் வழிவகுக்காது எனவும் அவை கலந்துரையாடல்கள் மூலம் தீர்க்கப்படக் கூடிய பிரச்சினைகளாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) தெரிவித்துள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது திஸ்ஸ அத்தநாயக்க கருத்து தெரிவிக்கையில்,
எமது பிரதிநிதிகளுடனேயே பதுளையிலும் மே தினக் கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் காவிந்த ஜயவர்தன, சமிந்த விஜேசிறி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சிலரால் முரண்பாடான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதையும் அவதானித்தோம்.
கட்சிக்குள்ள உள்ளக பிரச்சினைகள், கருத்து முரண்பாடுகள் காணப்படக்கூடும்.
இருப்பினும், அவற்றை கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும் ஒரு விடயமாக நாம் பார்க்கவில்லை. சிலர் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக உரையாற்றியுள்ளனர்.
மேலும் சிலர் தாம் எண்ணும் விடயங்களை பகிரங்கமாகக் கூறுபவர்களாக உள்ளனர். எது எவ்வாறிருப்பினும் கட்சிக்குள் ஒழுக்கம் காணப்பட வேண்டும். இவை கலந்துரையாடி தீர்த்துக் கொள்ளக் கூடிய பிரச்சினைகளாகும்.
தற்போது கட்சிக்குள் காணப்படுவது கருத்து முரண்பாடு மாத்திரமே. அவற்றுக்கு எம்மால் தீர்வு காண முடியும் என்று தெரிவித்துள்ளார்.