22 இலட்சம் பெறுமதியான 99 டயர்கள் திருட்டு ; 100 சிசிடிவி கமராக்களை ஆய்வு செய்தபின் சிக்கிய சந்தேக நபர்
பதுளை, ஹாலிஎல போகஹமடித்த பகுதியில் அமைந்துள்ள டயர் விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து, சுமார் 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான 99 டயர்களைத் திருடிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் ஒருவர், சுமார் 10 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவச் சிப்பாய் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை
இந்தத் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய சந்தேக நபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த டயர் விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்புக் கமராக்களின் செயற்பாட்டைத் தடை செய்துவிட்டு சந்தேக நபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், அருகில் உள்ள இடங்களில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்புக் கமராக்கள் மற்றும் பலாங்கொடை வரையிலான பிரதான வீதிகள், உள்வீதிகளில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 100 சிசிடிவி கமராக்களின் காணொளிப் பதிவுகளைப் பொலிஸார் ஆய்வு செய்துள்ளனர்.
இதன்போது, திருடப்பட்ட டயர்களை ஏற்றிச் சென்ற லொறியின் இலக்கத்தை அடையாளம் காண முடிந்துள்ளது. குறித்த வாகன இலக்கத்தை மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு அனுப்பி, லொறியின் உரிமையாளரைப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
ஓபநாயக்க பகுதியைச் சேர்ந்த லொறியின் உரிமையாளர், அந்த வாகனத்தை மூன்று மாத காலத்துக்கு சந்தேக நபர் ஒருவருக்கு வாடகைக்கு வழங்கியிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த பகுதிக்குச் சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார், திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட லொறியைக் கண்டுபிடித்துள்ளனர்.
லொறியைச் செலுத்திய சந்தேக நபரைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியபோது, அவரது வீட்டில், திருடப்பட்ட டயர்களில் 66 டயர்கள் இருந்த நிலையில், அவற்றை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் ஹாலி-எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.