கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம் ; ஜனாதிபதியின் பணிப்புரை
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் கொள்ளளவை அதிகரிப்பதற்கும், பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை வழங்குவதற்குமாக செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் அபிவிருத்தியுடன் இணைந்ததாக, நாட்டின் ஏனைய உள்நாட்டு விமான நிலையங்களையும் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

விமான நிலைய மேம்பாட்டுத் திட்டம்
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தொடர்பான 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள் குறித்து இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
கட்டுநாயக்க விமான நிலைய மேம்பாட்டுத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் அதனுடன் இணைந்ததாக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும், கட்டுநாயக்க விமான நிலையம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய விமான நிலையங்களின் பயணிகள் கொள்ளளவை அதிகரிப்பதற்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் வான்வழிப் பயணிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையில் விமான நிலையங்களை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.