அதிபரின் மூர்க்க குணத்தால் 7 மாணவர்கள் வைத்தியசாலையில் ; வீதிக்கு இறங்கிய பெற்றோர்!
நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையொன்றில் இம்முறை 5ம் ஆண்டு புலமைப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 07 மாணவர்கள் அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மாணவர்களின் பெற்றோர்களால் ராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அத்துடன் நுவரெலியா வலயக் கல்வி காரியாலயத்திற்கு சென்று குறித்த பாடசாலையின் அதிபரை இடமாற்றம் செய்ய கோரி எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வீதிக்கு இறங்கிய பெற்றோர்
எனினும் இதுவரை உரிய தீர்வு கிடைக்காதன் காரணமாகவே பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து இன்று (11) குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கூறுகையில்,
கடந்த சனிக்கிழமை பாடசாலையின் அதிபரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்வி கருத்தரங்குக்கு செல்லாத ஏழு மாணவர்களை பிரம்பால் தாக்கியதாகவும் இதனால் அவர்கள் நடக்க கூட முடியாது உள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் குறித்த அதிபர் பாடசாலைக்கு மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும் , தற்போது நியமிக்கப்பட்டுள்ள அதிபர் நிர்வாகத் திறன் அற்றவராக உள்ள நிலையில் உடனடியாக அவரை மாற்றி புதிய அதிபரை நியமிக்கமாறும் கோரியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நீண்ட காலமாக உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த போதும் இதுவரை குறிப்பிட்ட அதிபரை இடமாற்றம் செய்ய எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
அதேவேளை, போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த நுவரெலியா வலயக்கல்வி பணிமனை அதிகாரிகளும் , ராகலை பொலிஸ் நிலைய அதிகாரிகளும் உடனடியாக இந்த விடயம் தொடர்பாக துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.
அதோடு பாடசாலையில் இருந்து குறித்த அதிபரை வெளியேற்றி நுவரெலியா வலயக்கல்வி பணிமனை அழைத்துச் சென்றதன் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.