நுவரெலியாவில் தேயிலை தூளை திருடி விற்பனை செய்த 7 பேருக்கு நேர்ந்த கதி!
நுவரெலியா - அக்கரப்பத்தனை ஹோல்புறூக் பிரதேசத்தில் இயங்கும் தேயிலை தொழிற்சாலையில் 1500 கிலோ கிராம் கொண்ட தேயிலை தூளை திருடி விற்பனை செய்த 7 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
தேயிலை தொழிற்சாலையில் ஏற்றுமதி செய்வதற்காக பொதி செய்யப்பட்டிருந்த தேயிலை தூளை லொறியில் ஏற்றி வெளியில் கொண்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பாக தொழிற்சாலை முகாமையாளருக்கு இரகசிய தகவல் கிடைத்த நிலையில் குறித்த முகாமையாளர் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த லொறியும் களவாடப்பட்ட தேயிலைத் தூளையும் பொலிஸார் கைப்பற்றியதோடு சம்பவம் தொடர்பாக 7 பேரையும் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் காவலாளிகள் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் இன்றையதினம் (15-09-2023) நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதில் 7 பேரும் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.