பாடப் புத்தக சர்ச்சை; பணிப்பாளர் நாயகம் விலகல்
தேசிய கல்வி நிறுவகத்தினால் தயாரிக்கப்பட்ட தரம் 6 ஆங்கிலக் கற்றல் தொகுதியில் இடம்பெற்ற சர்ச்சை விசாரணை முடியும் வரை, அதன் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரண தனது பதவியிலிருந்து தற்காலிகமாக விலகத் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
தேசிய கல்வி நிறுவகத்தினால் தயாரிக்கப்பட்ட மேலதிக கற்பித்தல் உள்ளடக்கங்களில், பொருத்தமற்ற இணையதளக் குறிப்பு சேர்க்கப்பட்டமை குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பாக, சுயாதீன விசாரணைக்கு வழிவகுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்பாலீர்ப்பாளர்களுக்கான இணையதளம்
அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட அடுத்தகட்ட விசாரணைகளின் போது, சர்ச்சைக்குரிய இணையதள முகவரியானது தன்பாலீர்ப்பாளர்களுக்கான இணையதளம் ஒன்றிற்கு இட்டுச் செல்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கல்வி அமைச்சு இது குறித்து உள்ளக விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளது.
அத்துடன், அச்சிடப்பட்ட தரம் 6 ஆங்கிலப் பாடத் தொகுதிகளை விநியோகிப்பதையும் கல்வி அமைச்சு இடைநிறுத்தியுள்ளது.
அதேவேளை வருங்கால கலைத்திட்ட மேம்பாடுகளின் போது இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதைத் தவிர்க்க, விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில் திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.