பதிவுச் சான்றிதழும் இல்லை ; 6 சுகாதார விதிமீறல்களுக்கு இருவருக்கு ரூ.60,000 அபராதம்
உரிய வெப்பநிலை மற்றும் சுகாதாரத் தரங்களைப் பேணாமல் சுமார் 40,000 ரூபாய் பெறுமதியான தயிர் தொகையைக் கொண்டு சென்ற இருவருக்கு வவுனியா நீதவான் நீதிமன்றம் மொத்தமாக 60,000 ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஆறு குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட இருவருக்கும் 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவிலிருந்து வவுனியா, குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு நிறுவனமொன்றுக்கு தயிர் தொகை கொண்டு செல்லப்பட்டபோது, வவுனியா மாநகர சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மேற்கொண்ட சோதனையில் பல்வேறு சுகாதார விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
உரிய வெப்பநிலையைப் பேணாமல் தயிரைக் கொண்டு சென்றமை, மனித நுகர்வுக்கான உணவுப் பொருட்களை கால்நடைத் தீவனத்துடன் சேர்த்துக் களஞ்சியப்படுத்தியமை, பதிவுச் சான்றிதழின்றி உணவுப் பொருளைத் தயாரித்தமை, பெயரிடல் விதிமுறைகளைப் பின்பற்றாமை மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவைக் கொண்டு சென்றமை உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டன.
இதனையடுத்து, கைப்பற்றப்பட்ட தயிர் தொகை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணைகளின் முடிவில், குறித்த இருவரையும் குற்றவாளிகளாகக் கண்ட வவுனியா நீதவான் நீதிமன்றம், தலா அபராதம் விதித்ததுடன், 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையையும் வழங்கியது.
இருவருக்கும் விதிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகை 60,000 ரூபாயாகும். பால் உற்பத்திப் பொருட்களைத் தயாரித்தல், களஞ்சியப்படுத்தல் மற்றும் போக்குவரத்து செய்தல் ஆகிய நடவடிக்கைகளின்போது உரிய உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தைப் பொதுச் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.