இலங்கைக்கு மேலும் 50 மெட்ரோ பேருந்துகள்
கொழும்புக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ பஸ் சேவை 2027 ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள அனைத்து நபரங்களுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளன.
மேலும் 2027 ஆம் ஆண்டில் மேலும் 50 பஸ்களைச் சேர்ப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இச் சேவை கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் காலி ஆகிய பகுதிகளுக்கும் எதிர்காலத்தில் மெட்ரோ பஸ் சேவையை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு பாதைகளை உள்ளடக்கி 10 பஸ்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த முன்னோடித் திட்டம், தற்போது கணிசமான வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கமை தற்போது மேல் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் 7 பாதைகளில் 122 மெட்ரோ பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
'LMT Go’ மொபைல் செயலியை மேம்படுத்துதல் மற்றும் பயணிகள் சேவையின் தரத்தை உயர்த்துதல் தொடர்பில் பிரதி அமைச்சரின் தலைமையில் 04 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விரிவாக்கத் திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.