நாட்டில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 50 பேர் கைது
வியாபார விசா (Business Visa) மூலம் இலங்கைக்கு வருகை தந்து, விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசாரணை பிரிவினரால் நேற்றையதினம் (21) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குழுவில் 47 சீன நாட்டவர்களும், 2 மலேசிய நாட்டவர்களும், ஒரு இந்திய நாட்டவரும் அடங்குகின்றனர்.

இவர்கள் நீர்கொழும்பு பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருப்பதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் தற்போது வெலிசர தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்களை விரைவில் நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு (Deport) நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது