இளைஞர்களுக்கு மிக முக்கியமான 5 வகை சத்துகள்! எவை தெரியுமா?
சமீப ஆண்டுகளில் மனிதர்களின் வாழ்க்கை முறை வெகுவாக மாறியிருக்கிறது. நமது உணவு, தூக்கம் உள்ளிட்ட வாழ்வியல் நடைமுறைகள் அனைத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
ஆரோக்கியமற்ற உணவு முறை
மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு முறை, உடற்பயிற்சியின்மை போன்றவை நம் வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ளன. குறிப்பாக 30 முதல் 40 வயதுடைய இளைஞர்கள் பெரும்பாலானோர் இந்த புதிய வாழ்க்கை மாற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு அனைத்து ஊட்டச்சத்துகளும் அடங்கிய ஆரோக்கியமான உணவு முறை அவசியமாகிறது. ஆனால், ஒருசில உணவுகளை மட்டும் சாப்பிடுவதன் மூலமாக அனைத்து வகை சத்துகளும் கிடைத்துவிடாது.
ஆக, நம் உடலின் சத்துப் பற்றாக்குறையை போக்கும் வகையில் சில சத்து மாத்திரைகளை நாம் எடுத்து கொள்வது அவசியமானது.
மல்டிவிட்டமின்
நம் உடல் முறையாக இயங்குவதற்கு சில அடிப்படையான விட்டமின்கள் மற்றும்ம் தாதுக்கள் தேவை. இவற்றை நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு மூலமாகவே பெற்றுவிட வேண்டும்.
ஆனால், உணவு மாற்றங்கள் மற்றும் துரித உணவுகளை உட்கொள்ளும் பழக்கம் உடையவர்களுக்கு பெரும்பாலும் இது சரியாக சென்று சேருவதில்லை. இத்தகைய சூழலில் நீங்கள் மல்டிவிட்டமின் மாத்திரை எடுத்துக் கொள்வது நல்லது.
ஒமேகா 3
ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் சத்தானது மீன்கள், பாதம், வால்நட் போன்றவற்றில் அதிகமாக உள்ளது. நமது இதய ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது. மிக அடிப்படையான இந்த நல்ல கொழுப்புச்சத்தை நமது உடலால் உற்பத்தி செய்து கொள்ள முடியாது. நாம் வெளி உணவுகள் மூலமாகவே இதனை சரி செய்து கொள்ள வேண்டும்.
ஒருவேளை உணவு மூலமாக ஒமேகா 3 சத்து உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அதற்கென பிரத்யேகமாக விற்பனையாகும் மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளலாம்.
வைட்டமின் டி
காலை நேரம் அல்லது மாலை நேரத்தில் சூரிய வெளிச்சம் நம் மீது படர்ந்தால் போதும். நம் உடல் விட்டமின் டி சத்தை சூரிய ஒளியில் இருந்து இழுத்துக் கொள்ளும். நமது எலும்பு வலுவாக இருக்கவும், அடர்த்தி அதிகரிக்கவும் இந்த சத்து மிக முக்கியமானது.
ஒருவேளை நீங்கள் இரவு வேலைக்கு செல்பவர் என்றால் அல்லது குளிர் பிரதேசத்தில் வாழுபவர் என்றால் இந்த சத்து உங்களுக்கு முழுமையாக கிடைக்காமல் இருக்கலாம். இத்தகைய தருணத்தில் நீங்கள் சத்து மாத்திரை எடுத்துக் கொள்ளலாம்.
பயோடின்
இதுவும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் வகை சத்துதான். நம் முடி வளர்ச்சிக்கு இந்த சத்து முக்கியமானது. நமது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இது உதவுகிறது.
அடிக்கடி துரித உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு செரிமானக் கோளாறுகள் ஏற்படக் கூடும். அதை சரி செய்ய இந்த சத்து உதவும்.
தாவிர வகை புரதம்
இறைச்சிகளிலும் புரதம் உண்டு என்றாலும், தாவிர வகை புரதங்களை எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்ல பலனை தரும். இதனுடன் உடலுக்கு தேவையான நார்ச்சத்து மற்றும் அடிப்படை ஊட்டச்சத்து ஆகியவையும் கிடைக்கும்.
சைவ உணவுப் பிரியர்களுக்கு புரதம் கிடைக்க இது ஒரு வாய்ப்பாக உள்ளது.நல்லதொரு உணவு மூலமாக கிடைக்கும் சத்துகளுக்கு ஈடாக சத்து மாத்திரைகள் வராது என்றாலும், வேறு வழியின்றி தவிப்போருக்கு இது தீர்வு தருவதாக அமையும்.