இலங்கை தொடர்பான பிரேரணைக்கு பிரித்தானியா, கனடா உட்பட 05 நாடுகள் அனுசரணை
ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான பிரேரணை வரைவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மீதான இந்த பிரேரணைக்கு பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் அனுசரணை வழங்கியுள்ளன.
இலங்கை மனித புதைகுழிகள்
இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஐக்கிய இராச்சியம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையை ஐக்கிய இராச்சியத்தின் மனித உரிமைகள் தூதுவர் எலினோர் செண்டர்ஸ் சமர்ப்பித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை விஜயம் மற்றும் அவரது அறிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் குறித்து விசாரணைகளை நடத்துவது மிகவும் முக்கியம் என்றும், அது சர்வதேச தரத்தின்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஐக்கிய இராச்சியம் சுட்டிக்காட்டியுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்யத் தவறியது, அடிப்படை சுதந்திரங்களை கட்டுப்படுத்த தொடர்ந்து பயன்படுத்தப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கவலை வௌியிடப்பட்டுள்ளது.
மோதல் தொடர்பான பாலியல் வன்முறை குறித்த ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் பணிகளை ஊக்குவிப்பதுடன், இந்தப் பிரச்சினையை முன்னுரிமையாகக் கையாள வேண்டியதன் அவசியத்தையும் ஐக்கிய இராச்சியம் வலியுறுத்தியுள்ளது.
வெளிப்புற தலையீட்டை விரும்பாத இலங்கை
இந்தப் பிரச்சினைகளில் இலங்கை அரசாங்கத்துடன் திறம்பட ஈடுபடுவதற்கான தனது விருப்பத்தை ஐக்கிய இராச்சியம் மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கனடா, மலாவி, மொண்டினீக்ரோ, வடக்கு மெசிடோனியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நாடுகளின் முக்கியக் குழு, கடந்த பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது.
ஐ.நா.வுக்கான ஐக்கிய இராச்சியத்தின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி குமார் அய்யரால் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன், வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத்தின் வருகைக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நல்லாட்சி மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் ஆகியவற்றிற்கான அதன் உறுதிப்பாட்டை அர்த்தமுள்ள செயல்களாக மாற்றுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் தொடங்கியதுடன், நிகழ்வில் பேசிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத், நாட்டில் மனித உரிமை மீறல்களை விசாரிக்க முன்மொழியப்பட்ட எந்தவொரு வெளிப்புற தலையீடு அல்லது பொறிமுறையையும் இலங்கை நிராகரிப்பதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.