அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவல்... வசமாக சிக்கிய 5 பேர்!
குருநாகல் மற்றும் அநுராதபுரம் அகிய பகுதிகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 16 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலம்புரி சங்குகள், விஷேட சங்குகள் மற்றும் மான் கொம்புகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் ஐவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீரிகம மற்றும் அனுராதபுரம் ஆகிய விமானப்படை புலனாய்வுப் பிரிவினர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், வலம்புரி சங்குகள் , விஷேட சங்குகள் மற்றும் மான் கொம்புகள் என்பவற்றை விற்பனை செய்ய சென்றபோதே குறித்த ஐந்து சந்தேக நபர்களையும் வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸ் அதிரடிப் படை அதிகாரிகளும் இணைந்து கைது செய்துள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்புகளில் குருநாகல் வாரியாப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 3 சந்தேக நபர்கள், 03 அடுக்கு கொண்ட மான் கொம்புகள் மற்றும் விஷேட சங்குகளை ஒரு இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்வதற்காக லொறி ஒன்றில் வருகை தந்த மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, அனுராதபுரம், ரம்பாவ பகுதியில் வைத்து வலம்புரி சங்குகள் மற்றும் விஷேட சங்குகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், அவர்களை நிக்காரெட்டிய மற்றும் அனுராதபுரம் ஆகிய நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.