இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய 47 இந்திய மீனவர்கள்
இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த 47 இந்திய மீனவர்கள் இன்று காலை சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் மீன்பிடிக்க சென்ற 56 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைதுசெய்தனர்.
அதன் பின்னர் கைதான மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 56 மீனவர்களும் கடந்த மாதம் 25ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர்.
Back to their homes !!! 47 #Indian fishermen have been repatriated to #Chennai today morning . pic.twitter.com/5nsSxkIlXW
— India in Sri Lanka (@IndiainSL) February 18, 2022
தொடந்து விடுதலை செய்யப்பட்ட இந்த 56 மீனவர்களில் 9 மீனவர்கள் மட்டும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்பட்டனர்.
இந்த நிலையில் இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு கொழும்பில் இந்திய தூதரக அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தனிமையில் தங்க வைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் பகுதியை சேர்ந்த 47 மீனவர்களும் இன்று காலை விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.