வெளிநாடுகளில் 43 சர்வதேச சிவப்பு அறிவித்தல் குற்றவாளிகள்
சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ள 43 திட்டமிடப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தற்போது இருக்கும் நாடுகள் குறித்த தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (28.11.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் அவர்களில் 17 பேர் துபாயிலும் 14 பேர் இந்தியாவிலும், மூவர் ஜப்பானிலும் தங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஏனையோர் ஒன்பது நாடுகளில் தங்கியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. அத்துடன், இவர்கள் அனைவரையும் விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய 818 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள திட்டமிடப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தொடர்பில் 233 சர்வதேச சிவப்பு அறிவித்தல்களும் 92 நீல அறிவித்தல்களும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வெளிநாடுகளில் இருந்த 72 திட்டமிடப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் இதுவரை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்பான தேவையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.