இலங்கையின் 3 முன்னணி வங்கிகளுக்கு 400 மில்லியன் டொலர் கடனுதவி!
இலங்கைக்கு உதவும் நோக்கில் நாட்டின் 3 முன்னணி வங்கிகளுக்கு மாற்று நாணய வசதியின் கீழ் 400 மில்லியன் டொலர்களைக் சர்வதேச நிதியியல் ஒத்துழைப்பு கடனாக வழங்கியுள்ளது.
இந்த கடனுதவி இலங்கையில் 30 சதவீதத்துக்கும் அதிகமான வெளிநாட்டுப்பணவனுப்பல்கள் மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளைக் கையாளும் கொமர்ஷல் வங்கி, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி மற்றும் சம்பத் வங்கி ஆகிய 3 முன்னணி வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியத்தேவைகளைப் பூர்த்தி செய்யும்
இவ்வுதவியானது தனியார் துறையினருக்கான அவசர நிதியுதவிகளுக்கும், நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அத்தியாவசியத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்கும் பங்களிப்புச்செய்யும் என்று உலக வங்கியின்கீழ் இயங்கும் சர்வதேச நிதியியல் ஒத்துழைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி ஒருவருடகாலத்திற்கென வழங்கப்படவுள்ள இவ்வுதவியின் மூலம் பெருமளவிற்கு அமெரிக்க டொலர்களில் மேற்கொள்ளப்படும் வர்த்தக நடவடிக்கைகளான உணவு, மருந்து மற்றும் உரம் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களை இறக்குமதி செய்வதற்குரிய நிதியை மேற்குறிப்பிட்ட வங்கிகளால் வழங்கக்கூடியதாக இருக்கும் என்றும் சர்வதேச நிதியியல் ஒத்துழைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
உலக வங்கிக்கட்டமைப்பின் கீழான சர்வதேச நிதியியல் ஒத்துழைப்பின் இந்த உதவியின் ஊடாக குறித்த வங்கிகள் தமது வாடிக்கையாளர்களின் வணிக செயற்பாடுகளுக்கு அவசியமான நடுத்தர மற்றும் நீண்டகால நிதி வழங்கலுக்கு ஏற்ற இயலுமையைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.