நாடு முழுவதும் பாதுகாப்பற்ற நிலையில் 4,000 சிறுவர்கள்
நாடு முழுவதும் சுமார் 4,000 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக பொலிஸார் கண்டறிந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (13) பழைய கச்சேரி மண்டபத்தில், அபிவிருத்திக் குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பில் 700 சிறுவர்கள்
இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த சிறுவர்களின் தாய் அல்லது தந்தை வெளிநாடு சென்றிருப்பது, அவர்களை விட்டுவிட்டு மறுதிருமணம் செய்துகொள்வது, அல்லது போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது போன்ற காரணங்களால் மட்டக்களப்பில் 700 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.
மேல் மாகாணத்தில் 2,019 சிறுவர்களும், இலங்கை முழுவதும் 4,000 சிறுவர்களும் இத்தகைய நிலையில் உள்ளனர்.
இவர்களுக்கு அன்பு, பராமரிப்பு, ஆதரவு வழங்குவதற்கும், அவர்களின் கல்வி தொடர்வதை உறுதி செய்வதற்கும் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.