யாழ் பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பட்டமளிப்பு விழா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்றைய தினம் (19) ஆரம்பமாகியது.
மரபார்ந்த பண்பாட்டு அணிவகுப்புடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் பீடாதிபதிகள் அணிவகுத்து வர, கொடி, குடை, ஆலவட்டங்கள் சகிதம் விழா அரங்குக்கு வருகைதந்த துணைவேந்தர் அமர்வுகளுக்குத் தலைமை தாங்கிப் பட்டங்களையும், பரிசில்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
பட்டங்களைப் பெறவுள்ள 3920 மாணவர்கள்
எதிர்வரும் சனிக்கிழமை வரை 13 அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு வைபவத்தில் 3920 மாணவர்கள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.
இம்முறை உயர் பட்டப் படிப்புகள் பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம், கலைப்பீடம், பொறியியல் பீடம், விவசாய பீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், மருத்துவ பீடம், தொழில்நுட்ப பீடம்,
இந்துக் கற்கைள் பீடம், சித்த மருத்துவ பீடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னை நாள் வவுனியா வளாகத்தைச் (தற்போது வவுனியா பல்கலைக்கழகம்) சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம்,
பிரயோக விஞ்ஞானங்கள் பீடம் மற்றும் தொழில்நுட்பக் கற்கைகள் பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளதுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில், திறந்த மற்றும் தொலைக்கல்வி முறைமை மூலம் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்தவர்ளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.