யாழில் 33 வயது இளைஞன் உயிரிழப்பு ; உடற்கூற்றில் வெளியான அதிர்ச்சி தகவல்
யாழ்ப்பாணம் – கோப்பாய் தெற்கு பகுதியில் அதிகளவு போதைப்பொருள் பாவித்ததாகக் கூறப்படும் 33 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் கஷ்மன் (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இளைஞர் நேற்று (10) இரவு கோப்பாய் தெற்கு பகுதியில் உள்ள வாழைத்தோட்டம் ஒன்றுக்குள் மயக்கமடைந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதனைக் கண்ட அவரது நண்பர்கள் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனைகளின் அடிப்படையில், அதிகளவு போதைப்பொருள் பாவனை காரணமாக மரணம் ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சியங்களை கோப்பாய் காவல்துறையினர் பதிவு செய்து, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.